தர்மபுரி மாணவியிடம் சில்மிஷம் செய்தவருக்கு 3 ஆண்டு சிறை

 

நெல்லை, ஏப். 22: நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பட்டமளிப்பு விழாவுக்கு வந்த கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தென்காசியை சேர்ந்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நெல்லை கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தர்மபுரியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ரயில் மூலம் நெல்லை வந்தார். பின்னர் அவர் சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது தென்காசியை சேர்ந்த மாரியப்பன் (48) என்பவரிடம் மனோன்மணியம் பல்கலைக்கழகம் செல்ல கல்லூரி மாணவி வழி கேட்டுள்ளார்.

அப்போது மாரியப்பன், பஸ் விபரத்தை தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த மாணவியிடம், மாரியப்பன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த மாணவி, அங்கிருந்து ஓட முயன்றபோது லேப்-டாப் தடுக்கி மாணவி கீழே விழுந்தார். அப்போது மாரியப்பன், மாணவியை தரையில் இருந்து தூக்கி முதலுதவி செய்வது போன்று நடித்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த மாணவி, உடனடியாக கூச்சலிட்டதால் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள், அந்த நபரை பிடித்து சந்திப்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மாரியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவிபிரியா, குற்றம் சாட்டப்பட்ட மாரியப்பனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜுடி ஏஞ்சலோ ஆஜரானார்.

The post தர்மபுரி மாணவியிடம் சில்மிஷம் செய்தவருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: