நீடாமங்கலம், ஏப்.18: கொரடாச்சேரி அருகே ஆய்குடி பாசிகுளத்தில் மண்டியுள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், ஆய்குடி ஊராட்சியை சேர்ந்த கொல்லாக்கண்டம் என்னும் கிராமத்தில் முக்கிய குளமாக உள்ளது பாசிகுளம். இந்த குளம் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாமல் உள்ளதால் குளம் முழுவதும் ஆகாய தாமரை செடிகள் மண்டிக்கிடக்கிறது. இதனால் சுகாதாரமாக இல்லாததால் குளத்து தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த குளத்தைச் சுற்றி கீழமுகந்தனூர், மேல முகந்தனூர், கொல்லாக்கண்டம், பட்டுடையான், இருப்பு, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்ப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த குளத்திற்கு வரும் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் தூர்ந்துள்ளது. எனவே குளத்திற்கு தண்ணீர் வரும் வடிகால் மற்றும் பாசன வாய்க்காலை தூர் வாரியும், குளத்தில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி தூர்வாரினால் சுகாதாரமான தண்ணீர் கிடைக்கும். கோடைகாலங்களில் மக்கள் குளிக்கவும், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பயன்பெறும் குளமாகவும் அமைந்து விடும்.
பாசிகுளம் நாகப்பட்டினம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலை முகந்தனூர் அருகில் உள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோடைகாலத்தில் பயன் பெறுவார்கள்.
அதுமட்டுமின்றி வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரை செல்பவர்கள் குளத்தின் அருகில் உள்ள கோயிலில் தங்கி பாசிகுளத்தில் நீராடி செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த குளத்தை தூர்வார அப்பகுதி மக்கள் ஒன்றிய ஆணையர், மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே கொரடாச்சேரி ஒன்றிய ஆணையர் நேரில் சென்று குளத்தை பார்வையிட்டு அப்பகுதியின் முக்கியமான பாசிகுளத்தில் மண்டியுள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி, தூர்வாரி குளத்திற்கான வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களையும் தூர் வாருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆய்குடி ஊராட்சியில் உள்ள பாசிகுளத்தில் மண்டிகிடக்கும் ஆகாயதாமரை செடிகள் appeared first on Dinakaran.