உலக பாரம்பரிய தினத்தையொட்டி காஞ்சிக்கு பெருமை சேர்க்க அஞ்சல் அட்டையில் இடம் பிடித்த 12 ஓவியங்கள்: மேயர் மகாலட்சுமி யுவராஜ் வெளியிட்டார்

காஞ்சிபுரம்: உலக பாரம்பரிய தினத்தையொட்டி, காஞ்சிபுரத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கோயில்கள் உட்பட 12 ஓவியங்கள் அஞ்சல் அட்டையில் இடம் பிடித்துள்ளன. இந்த அஞ்சல் அட்டையினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் வெளியிட்டார். உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களில், பாரம்பரிய பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் வளாகத்தில், தொல்லியல் துறையுடன் `போஸ்ட் கிராஸிங் சொசைட்டி ஆப் இந்தியா’ இணைந்து, உலக பாரம்பரிய தினத்தை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாரம்பரிய பெருமைகளை உலகம் அறியும் வகையில், பட்டு நெசவு, கட்டை கூத்து, நடாவி கிணறு, வரதராஜர் பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், பொம்மைகாரர், மாமண்டூர் குகை கோயில், காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 12 ஓவியங்கள் அஞ்சல் அட்டையில் இடம் பிடித்துள்ளன. இதனை, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் வெளியிட, சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, காஞ்சிபுரம் அஞ்சலகத்துறை முதன்மை அலுவலர் பாபு உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த 12 கோயில்களையும் யுனெஸ்கோ உலகின் பாரம்பரிய சின்னங்களில் தேர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகின் பாரம்பரிய சின்னங்கள் குறித்த கண்காட்சியும், அஞ்சலக வளாககத்தில் வைக்கப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். இதுகுறித்து, போஸ்ட் ட்ராக் சொசைட்டி ஆப் இந்தியா நிர்வாகி வெங்கடேஷ் கூறுகையில், ‘கடந்த ஓராண்டாகவே இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு, தற்போது காஞ்சிபுரத்தின் பெருமையை விளக்கும் 12 ஓவியங்களை அஞ்சல் அட்டைகளாக தயாரித்து உள்ளோம்.

இதனை வாழ்த்து அட்டைகளாக மாற்றி அனைவருக்கும் பகிர்ந்து காஞ்சிபுரத்தின் பெருமையை உணர்த்த செய்வோம். மேலும், தங்களின் அடுத்த முயற்சியாக காஞ்சிபுரம் பாரம்பரியம் குறித்த ஆவணப்படம் தயாரித்து, பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் தொலைக்காட்சிகள் மூலம் வெளியிடப்பட்டு காஞ்சியின் பெருமையை உலகறிய செய்ய முயற்சி மேற்கொள்வோம்’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், குமரன், தொல்லியல் மற்றும் தபால் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக பாரம்பரிய தினத்தையொட்டி காஞ்சிக்கு பெருமை சேர்க்க அஞ்சல் அட்டையில் இடம் பிடித்த 12 ஓவியங்கள்: மேயர் மகாலட்சுமி யுவராஜ் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: