மேலூர்: தம்பதியிடம் ரூ.50 லட்சம் கொள்ளையடித்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை, தெப்பக்குளத்தை சேர்ந்தவர் சேக் தாவூத். துணி வியாபாரி. இவர், கடந்த 12ம் தேதி இரவு, மனைவியுடன் காரில் பண்ருட்டி நோக்கி சென்றார். காரை டிரைவர் அபுபக்கர் சித்திக் (27) ஓட்டிச் சென்றார். மேலூர் அருகே திருச்சுனை என்னும் இடத்தில் போலீஸ் உடை அணிந்த 2 பேர், காரை நிறுத்தி சேக் தாவூது வைத்திருந்த ரூ.50 லட்சம் பணம் மற்றும் செல்போனை பறித்து டூவீலரில் தப்பிச் சென்றனர். சேக்தாவூது அளித்த புகாரின்பேரில், தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். கொள்ளையர்களால் பறிக்கப்பட்ட சேக் தாவூதின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, புதூர் பகுதியில் இருப்பதாக சிக்னல் காட்டியது.
இதையடுத்து, போலீசார், சேக்தாவூத்திடம், ‘‘புதூரில் யாராவது தெரிந்தவர்கள் உங்களுக்கு உள்ளனரா’’ என கேட்டபோது, தனது கார் டிரைவர் அபுபக்கர் சித்திக் (27) புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் டிரைவர் அபுபக்கர் சித்திக்கை பிடித்து விசாரித்தபோது, அதே பகுதியில் கறிக்கடை நடத்தும் அவரது சகோதரர் சதாம் உசேன் (32), அசன் முகமது (30), ஆத்திகுளம் மகாலட்சுமி நகரை சேர்ந்த பார்த்தசாரதி (42), மதுரை ஆயுதப்படை போலீஸ் டிரைவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த நாகராஜன்(39) ஆகியோர் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்தது தெரிந்தது.
இதையடுத்து அபுபக்கர் சித்திக், ஆயுதப்படை போலீஸ் நாகராஜன் உட்பட அனைவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் செலவழித்ததுபோக மீதமிருந்த ரூ.49.30 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில், டிரைவர் அபுபக்கர் சித்திக் ஆலோசனைப்படி கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. பணத்திற்கு முறையான கணக்கு இல்லாததால், கொள்ளையடித்தால் போலீசிற்கு செல்ல மாட்டார்கள் என நினைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்தது.
The post தம்பதியிடம் ரூ.50 லட்சம் பறிப்பு போலீஸ்காரர் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.