வேலூர்: திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து, நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து வரும் அவலநிைலக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ேகாரிக்கை வைத்துள்ளனர். பாலாறு கர்நாடக மாநிலத்தில் நந்திதுர்கம் மலையில் இருந்து உருவாகிறது. கர்நாடக மாநிலத்தில் 93 கி.மீ தூரம் பயணிக்கிறது. ஆந்திராவில் 33 கி.மீ. தூரம் பயணிக்கிறது. தமிழகத்தில் மட்டுமே அதிகப்படியாக 222 கி.மீ தூரம் என்று மொத்தமாக 348 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இதில் தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிழகத்தில் அதிக தூரம் பயணிக்கும் பாலாற்றில் நீர் வரத்து ஏற்படும் சமயங்களில் நிலத்தடி நீர்மட்டம் அனைத்து பகுதிகளிலும் கணிசமாக உயர்ந்து விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலை கொடுக்கும். அப்படி செழுமையாக இருந்த பாலாற்றின் நிலைமையோ இன்று அந்தோ பரிதாபம் என்ற நிலைக்கு மாறியுள்ளது.காரணம், பாலாற்றில் மழைவெள்ளம் பெருக்கெடுத்த நிலை மாறி வறண்டுபோனது.
இதையடுத்து கண்ணுக்கு தெரிந்த கனிமவளத்தை கொள்ளையடிக்க மாபியாக்கள் இரவு, பகலாக படையெடுத்து வருகின்றனர். இன்றளவு மணல்கொள்ளையை தடுக்க முடியாமல் உள்ளது. மணல் கொள்ளை மட்டுமின்றி தோல் கழிவுநீர் கலக்கிறது. மற்றொரு புறம் ஆக்கிரமிப்புகளாகவும் பாலாறு சுருங்கி வருகிறது. அதோடு, பாலாற்றில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டி எரிப்பது கட்டிடக்கழிவுகள் கொட்டுவது என்று, பாலாறு குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால், பாலாற்றையொட்டியுள்ள கிராமங்கள் விவசாயத்தை நம்பியிருந்த நிைல மாறி விவசாயம் சிறிது சிறிதாக நலிவுற தொடங்கியது. அதுவரை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி இருந்த மக்கள், வருமானம் ஈட்டுவதற்காக வெளியூர்களுக்கும், புதியதாக அப்போது முளைத்த தோல் தொழிற்சாலைகள் மற்றும் டேனரிகளை நோக்கியும் அதிக அளவில் படையெடுத்தனர். இதனால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகள் தோல் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க துவங்கியது.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு புதிய சிறிய மற்றும் பெரிய அளவிலான தோல் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் முளைக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக, தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் ஏற்றுமதி என்று தோல் பொருட்கள் சார்ந்த உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியது. ஆனால், தோல் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முன்பு தோலை பதனிடுவதற்காக அதிக அளவு ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு அதன் கழிவுகள் பாலாற்றில் எந்தவித தடையும் இல்லாமல் விடப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட கழிவுகள் நிலத்தில் அதிக அளவு ஊறியதன் விளைவாக, திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள குடிநீர் பொதுமக்கள் அருந்துவதற்கு தகுதியற்றதாகிவிட்டது. இதன் விளைவாக, வாணியம்பாடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அனைத்து தோல் தொழிற்சாலைகள் மற்றும் டேனரிகளின் கழிவுநீர் வெளியேற்றப்படுவது வரைமுறைப்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும், ஏற்கனவே வெளியேற்றப்பட்ட ரசாயனம் கலந்த கழிவு நீரால், மாசடைந்து நஞ்சாகிவிட்டது. இந்நிலையில் பாலாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் மழைக்காலங்களில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சில தனியார் தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்.
இதற்கு ஏற்றார் போல், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் மழைக்காலங்களிலும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்ற சமயங்களிலும் அதிக அளவிலான நுரை பழுப்பு நிறத்தில் மலை போல் தேங்கி நிற்பது அனைவரது மத்தியிலும் ஒரு வகையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறையானது தோல் கழிவு நீரால் ஏற்பட்டது அல்ல என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், சுத்திகரிப்பு நிலையத்தினரும் தொடர்ந்து தெரிவித்து வருகின்ற போதிலும் மழைக்காலங்களிலும், வெள்ளப்பெருக்கு நேரத்திலும் பாலாற்றில் சில தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக பாலாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோல்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் பாலாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்காணிப்பில் தீவிரம் காட்ட வேண்டும். பல ஆண்டுகளாக மக்கள் வைத்து வரும் கோரிக்கையாக உள்ள பாலாற்றில் தோல் கழிவுகள் கலப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதற்கு முற்றுப்புள்ளி எப்போது? மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கைக்கு கோரிக்கை appeared first on Dinakaran.
