பெண் குரலில் நண்பர்களுக்கு ‘ஐ லவ் யூ’ ஆடியோ: வாலிபர்கள் மோதல்

சேலம்: சேலத்தில் பெண் குரலில் ஐ லவ் யூ சொல்லி நண்பர்களுக்கு ஆடியோ அனுப்பிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் செல்லக்குட்டி காட்டை சேர்ந்தவர் மணிபூபதி (26). இவரது நண்பர்கள் குமரேசன், சதீஷ், அரவிந்த். வாலிபர்களான இவர்களின் செல்போன்களுக்கு கடந்த 3 நாட்களாக காதல் ஆடியோ வந்தது. அதில், நான் உங்களை காதலிக்கிறேன், ஐ லவ் யூ என பெண் குரல் ஒலித்தது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மூவரும் நண்பர்கள் என்பதால் இதுபற்றிய பேச்சு கசிந்தது. அப்போதுதான் பேசியது பெண் அல்ல, ஆண் என கண்டு பிடித்தனர். நண்பர் மணிபூபதி மீது சந்தேகம் எழுந்தது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை நேற்று அன்னதானப்பட்டி செல்லமுத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. அப்போது இருதரப்பினரும் நண்பர்களை அழைத்து வந்தனர். திடீரென இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதி கலவரம் போல காணப்பட்டது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து சென்றனர். இந்த மோதலில் மணிபூபதி, தினேஷ்குமார், அவரது தாய் மணி மற்றும் சதீஷ் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக மணிபூபதி அவர்களுக்கு பெண் குரலில் ஐ லவ் யூ ஆடியோ அனுப்பினார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: