தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்: சென்னை சென்ட்ரல்-கோவைக்கு 5.50 மணிநேரத்தில் சென்றடையும்

சென்னை: தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னை- கோவை தூரத்தை வெறும் 5 மணி 50 நிமிடங்களில் சென்றடைய முடியும். இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்தவும், மேலும் அதிக வேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே அதிநவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டதாக தயாரிக்கப்படுகிறது. இந்த ரயில் பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தான் நாட்டின் 12வது வந்தே பாரத் ரயில் சென்னை-கோவை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இதுவாகும்.

அதன்படி, சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10-வது பிளாட்பாரத்தில் நடைபெற்றது. வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவுக்காக 10வது பிளாட்பாரத்தில் தனி மேடை அமைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதத்தில் அந்த பிளாட்பாரத்தில், சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை 3.30 மணியளவில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்தார்.

அவர் விழா ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வந்தே பாரத் ரயிலை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 10-வது பிளாட்பாரத்திற்கு மாலை 4.08 மணிக்கு வந்தார். அவருடன், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் வந்தனர். பின்னர் பேட்டரி காரில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி, வந்தே பாரத் ரயிலுக்குள் சென்று பார்வையிட்டார். அப்போது மாணவர்கள், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

பின்னர் விழா மேடைக்கு மாலை 4.17 மணிக்கு வந்தார். இதையடுத்து, வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உடனடியாக வந்தே பாரத் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. முன்னதாக, சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலில் ஏறி பயணம் மேற்கொள்ள இருந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த ரயிலில் பயணிகள் சென்னையில் இருந்து கோவையை வெறும் 5 மணி 50 நிமிடங்களில் சென்று சேர முடியும். இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர பிற 6 நாட்கள் இயங்க உள்ளது. சென்னை -கோவை இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வழக்கமான ரயில்களை காட்டிலும் ஒரு மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றடையும்.

8 பெட்டிகளில் 536 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஐடி துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் உட்பட ரயிலில் பயணிக்கும் அனைவரின் வசதிக்காகவும் இலவச வைபை, அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி, சார்ஜர் பாயிண்ட், 360 டிகிரி கோணத்திலும் திருப்பிக் கொள்ளும் எக்ஸிக்யூட்டிவ் சேர் கார், சென்சார் கதவு மற்றும் விளக்குகள், நேரடியாக ரயில் ஓட்டுநரிடம் பேசும் எமெர்ஜென்சி டாக் பேக், சூரிய ஒளியில் இருந்து தற்காக்க மூடு திரை, ரயிலின் வேகம் மற்றும் அடுத்த நிறுத்தம் அறியும் டிஜிட்டல் திரை என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல வசதிகள் கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்ய, ஏசி சேர் கார் வகை இருக்கைக்கு ரூ.1215 கட்டணமும், எக்சிக்கியூடிவ் சேர் கார் வகை இருக்கைக்கு ரூ.2310 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ மாணவியர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், தேசிய பாஜ மகளிர் அணி செயலாளருமான வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் சேவையில் பயணித்தனர்.

  • விமானத்தை போன்ற வசதி

    ரயில் பயணத்தின் போது வானதி சீனிவாசன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வந்தே பாரத் ரயிலில் பயணிப்பதற்கும், விமானத்தில் பயணிப்பதற்கும் சிறிய வித்தியாசம் தான் உள்ளது. பாகுபாடு இல்லாமல் தமிழ்நாட்டிற்கு பிரதமர் பல்வேறு திட்டங்களை வழங்குகிறார்’’ என்றார்.

The post தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்: சென்னை சென்ட்ரல்-கோவைக்கு 5.50 மணிநேரத்தில் சென்றடையும் appeared first on Dinakaran.

Related Stories: