தனியார் பங்களிப்பு திட்டத்தில் பழைய குடியிருப்புகள் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பயனாளருக்கு கட்டி தரப்படும்: புதிய சட்டத்தில் விதிகள் உருவாக்கும் பணி தொடக்கம்; அமைச்சர் முத்துச்சாமி தகவல்

சென்னை: கோடம்பாக்கம், புலியூர் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 428 குடியிருப்புகள் உள்ளன. இதில் பெரும்பாலான குடியிருப்புகள் சிதலமடைந்துள்ளன. இதை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், வீட்டுவசதித்துறை செயலாளர் அபூர்வா, மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கோடம்பாக்கம் புலியூர் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 428 வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளுமே சேதம் அடைந்துள்ளன. அதனால் வீடுகளை சீரமைக்க வேண்டும், புதிதாக கட்டித்தர வேண்டும் என்று குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்போருக்கு ஒரு ரூபாய் செலவு இல்லாமல் புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் வீடுகளை புதிதாக கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்க முடியாத சூழல், இதன் காரணமாக புதிய அணுகுமுறையாக மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தனியார் பங்களிப்புடன் மீண்டும் புதிதாக வீடுகள் கட்டித்தர அரசு உதவி செய்யும். அதற்கென தனியாக புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பழைய சேதமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இந்த சட்டத்தின்படி பயனாளருக்கு ஒரு ரூபாய் செலவு இல்லாமல் தனியார் பங்களிப்பு முறைப்படி புதிதாக கட்டி தரப்படும். புதிதாக கட்டப்படும் வீடுகள் 80 முதல் 100 ஆண்டுகள் தாங்கும் வகையிலும், தரமான, வசதிகள் கொண்ட வகையிலும் கட்டவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 10 இடங்களில் இதுபோன்று பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. அதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

The post தனியார் பங்களிப்பு திட்டத்தில் பழைய குடியிருப்புகள் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பயனாளருக்கு கட்டி தரப்படும்: புதிய சட்டத்தில் விதிகள் உருவாக்கும் பணி தொடக்கம்; அமைச்சர் முத்துச்சாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: