பொதுப்பணித்துறை அதிகாரியின் வீட்டில் ரூ.32 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியது

காரைக்குடி: பொதுப்பணித்துறை அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.32 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறையின் உட்பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயற்பொறியாளராக பணியாற்றும் கண்ணன் அருகேயுள்ள பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இங்கு லஞ்ச பணம் இருப்பதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு செயற்பொறியாளர் கண்ணன் தங்கியிருந்த அறையை சோதனை செய்துள்ளனர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்து 570 மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து செயற்பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப வரைபட அலுவலர் குமரேசன், ஜீப் டிரைவர் முனியசாமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், காரைக்குடி பர்மா காலனியில் உள்ள செயற்பொறியாளர் கண்ணன் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையில் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 10 மணியளவில் சோதனையை ெதாடங்கினர். இச்சோதனை மதியம் 3 மணி வரை நடந்தது. இந்த சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட இருந்த காரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். 5 மணி நேரம் சோதனை முடிந்த பின் செயற்பொறியாளர் கண்ணன் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பொதுப்பணித்துறை அதிகாரியின் வீட்டில் ரூ.32 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: