திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.48.50 கோடியில் புதிய கட்டுமான பணிகள்: முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

திருத்தணி: திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ. 48.50 கோடி மதிப்பீட்டிலான புதிய கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இரண்டு ஆண்டிற்குள் பணிகள் முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விட கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். மேலும், முருகன் கோயில் கட்டுப்பாட்டில் மொத்தம், 29 உபகோயில்கள் உள்ளன.

இதுதவிர பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தான விடுதிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், திருமண மண்டபங்கள் கோயில் நிர்வாகம் கட்டி குறைந்த வாடகையில் விடப்படுகிறது. இந்நிலையில், கடந்த, 2021ம் ஆண்டு செப்.30ம் தேதி இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, அப்போதைய ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முருகன் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது, தணிகை இல்லம் வளாகத்தில் உள்ள கோயில் தலைமை அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள காலியான கோயில் நிலத்தை அமைச்சர் பார்வையிட்டார். பின், இந்த காலியான இடத்தில் புதியதாக ஐந்து திருமண மண்டபங்கள், நிர்வாக பயிற்சி பள்ளி ஆகியவை ஏற்படுத்தப்படும்.

அதேபோல், நந்தியாற்றின் கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயில் வளாகத்தில் நாதஸ்வரம், இசை பயிற்சி பள்ளியும் ஏற்படுத்தப்படும். இதற்கான, திட்டமதிப்பீடு தயார் செய்து விரைவில் செயல்படுத்தப்படும் என நிருபர்களிடம் அமைச்சர் கூட்டத்தில் அறிவித்தார். இந்நிலையில், முருகன் கோயில் தலைமை அலுவலகம் அருகே, நூறு பேர் அமரக்கூடிய நான்கு திருமண மண்டபம், 500 பேர் அமரக்கூடிய மற்றொரு திருமண மண்டபம் என மொத்தம், ஐந்து திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு, ரூ.22.50 கோடி, நிர்வாக பயிற்சி பள்ளி கட்டடத்திற்கு, ரூ.25 கோடி , நாதஸ்வரம், இசை பயிற்சி பள்ளிக்கு ரூ.96 லட்சம் என திட்டமதிப்பீடு தயார் செய்து, கோயில் நிதியின் மூலம் கட்டுவதற்கு இந்து அறநிலை துறை ஆணையருக்கு நிர்வாக அனுமதி கேட்டு திருத்தணி கோயில் நிர்வாகம் பரிந்துரை செய்தது.

பின் மேற்கண்ட கட்டடங்கள் கட்டுவதற்கு ஆணையர், நிர்வாக அனுமதி, நிதி ஓதுக்கீடு செய்வதற்கு அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த இரு மாதத்திற்கு முன் மேற்கண்ட கட்டிடங்கள் கட்டுவதற்கு கோயில் நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்பட்டது. இது குறித்து திருத்தணி கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதியதாக ஐந்து திருமண மண்டபங்கள், நிர்வாக பயிற்சி பள்ளி மற்றும் நாதஸ்வரம் இசை பயிற்சி பள்ளி ஆகியவை கட்டுவதற்கு நிர்வாக அனுமதி, தொழிற்நுட்ப அனுமதி, இந்து அறநிலை துறை ஆணையர் வழங்கியதை தொடர்ந்து அந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

விரைவில் பணிகள் துவங்கி, இரண்டு ஆண்டிற்குள் முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடவும் திட்டமிட்டுள்ளோம் என கூறினார். இந்த விழாவிற்கு, முருகன் மலைக் கோயிலில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை ஆணையர் லட்சுமணன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு மதுசூதனன், திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, நகர்மன்ற துணை தலைவர் சாமிராஜ், கோவில் துணை ஆணையர் விஜயா, திருத்தணி தாசில்தார் விஜயராணி, வருவாய் ஆய்வாளர் கமல், திருத்தணி தி.மு.க. நகர செயலாளர் வினோத்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

The post திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.48.50 கோடியில் புதிய கட்டுமான பணிகள்: முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: