×

களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் திரளானோர் பங்கேற்பு

களக்காடு, மார்ச் 28: களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர். நெல்லை மாவட்டம் களக்காட்டில் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதாக திகழும் இக்கோயிலில் வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் தனி தனி சன்னதிகளில் எழுந்தருளியிருப்பது சிறப்பு பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரமோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா முதல் நாளான நேற்று (27ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பெருமாள் பூமி, நீலா தேவியர்களுடன் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் கோயில் கொடி மரத்தில் கருடன் படம் பொறித்த திருக்கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் இடம்பெற்றது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

 இதையடுத்து இரவில் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி வரதராஜபெருமாள் காட்சி அளித்தார். திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் 5ம் நாளான மார்ச் 31ம் தேதி இரவில் 2 கருட வாகனங்களில் பெருமாளும், வெங்கடாஜலபதியும் உலா வருகின்றனர். 7ம் நாளான ஏப்.2ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண விழா நடத்தப்படுகிறது. 8ம் நாளான ஏப்.3ம் தேதி இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா வருகிறார். விழாவின் சிகரமான தேரோட்டம் 10ம் நாளான ஏப்.5ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11ம் நாளான 6ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Panguni Brahmotsava ,Varadarajaperumal ,Kalakadu ,
× RELATED மன்னை ராஜகோபால சுவாமி கோயிலில்...