×

உரம் வாங்க செல்லும் போது சாதியை கேட்கும் அவலம் நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் தருவதில் காலதாமதம் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

நெல்லை, மார்ச் 25: நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கு பணம் தருவதில் காலதாமதம் செய்து வருவதாகவும், உரமூடைகள் பெறும்போது சாதியை கேட்பதாகவும் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. சேரன்மகாதேவி சப்கலெக்டர் முகம்மது சபீர்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், வேளாண்துறை இணை இயக்குனர் முருகானந்தம், துணை இயக்குனர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசுகையில், ‘‘நெல்லை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 52 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தமிழ்நாடு நெல், அரிசி கொள்முதல் கூட்டமைப்பு மூலம் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு 11 ஆயிரத்து 899 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 69 லட்சத்து 96 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில் 24,409 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பில் 17,500 ஹெக்டேர் பரப்பில் அறுவடை முடிந்துள்ளது.’’ என்றார். பின்னர் விவசாயிகள் வேளாண் பிரச்னைகள் குறித்து பேசினர். முன்னீர்பள்ளம் விவசாயி பாலையா: நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைகளை வைக்கும்போது விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நாளாகிறது. நடமாடும் நெல் முதல் நிலையங்களில் 2 நாளில் பணம் தருவோம் என்கின்றனர். ஆனால் அவர்களும் பணத்தை தராமல் இழுத்தடிக்கின்றனர். அறுப்பு கூலி, டிராக்டர் கூலி, கொள்முதல் நிலையங்களுக்கு ஏற்று, இறக்கு கூலிகளை நாங்கள் கொடுக்க வேண்டியதுள்ளது.

மேலப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் குழந்தைவேலு: பாளையங்கால்வாய் பராமரிப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரி: கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.68 லட்சத்தில் நெல்லை கால்வாயை தூர் வாரினோம். இவ்வாண்டு ரூ.45 லட்சத்தில் பாளையங்கால்வாயை தூர் வார திட்டமிட்டுள்ளோம். கால்வாயில் பாசி எடுக்கவும், ஆகாய தாமரையை அகற்றவும் அதிக பணம் செலவாகிறது.

மானூர் விவசாயி ஆபிரகாம்: தென்னைக்கு அரசு நாற்றுப்பண்ணை அமைக்க வேண்டும். வேளாண் இயந்திரம் வாங்கிட உரிய மானியம் வழங்க வேண்டும். காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் எங்கள் பகுதியில் பருத்தி பயிரை சேதப்படுத்தி வருகின்றன. இதற்காக வனத்துறையிடம் புகார் செய்தால் அவர்கள் 5 துறைகளின் சான்று கேட்கின்றனர். இவற்றை பெற நாங்கள் 6 மாதம் போராட வேண்டியதுள்ளது.

மூலைக்கரைப்பட்டி விவசாயி செல்வக்குமார்: மூலைக்கரைப்பட்டி இ.பி. அலுவலகம் உள்ள பாலம் கட்டும் பணிகள் மழைக்காலத்தில் நடந்ததால், மணிமுத்தாறு தண்ணீர் கடைமடைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டு எங்கள் பகுதியில் 10 ஏக்கர் நிலத்திற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 30 குளங்கள் கூட சீரமைக்கப்படவில்லை. மூலைக்கரைப்பட்டி கூனிகுளம் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டும் பணிகளை நடத்தாமல் இழுத்தடிக்கின்றனர்.

களக்காடு விவசாயி பெரும்படையார்: சாகுபடி உரங்களை கேட்டு வேளாண் விற்பனை சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளை அணுகினால், ஆதார் மற்றும் ஏக்கர் விபரங்களோடு, சாதியையும் கேட்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். உணவு உற்பத்தி செய்யும் அனைவருமே இந்தியாவில் ஏழை ஜாதிதான்.
ராதாபுரம் விவசாயி பாலகிருஷ்ணன்: கடந்த 2 கூட்டங்களாக குறைதீர்ப்பு கூட்டத்தில் நான் மனு அளித்தும், கேள்விக்கான மனு வரவில்லை என்கின்றனர். எங்கள் இருக்கன்துறை பகுதிகளில் குவாரி, கிரஷர்களால் விவசாயிகள் பயிர் செய்யும் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. பப்பாளி, பிச்சி, தக்காளி ஆகியவற்றில் தூசு அடைந்து வருகிறது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு நடத்த வேண்டும்.

பணகுடி விவசாயிகள்: பணகுடி, காவல்கிணறு வட்டாரங்களில் மாடுகள் மேய்க்க இடமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மாடுகளை வளர்க்க அரசு ஊக்குவித்து வரும் நிலையில் எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் நாட்டு மாடுகள் உள்ளன. ஆனால் மேய்ச்சலுக்கு நிலங்கள் இல்லை. பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு சொந்தமான வனப்பகுதிகளும், மகேந்திரகிரி இஸ்ரோ வனப்பகுதியும் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் இருப்பதால் எங்கள் பகுதியில் நாங்கள் மேய்ச்சலுக்கு நிலங்கள் இன்றி தவிக்கிறோம். மேய்ச்சலுக்கான நிலங்களில் கட்டுமானங்கள், தனியார் காற்றாலைகள் என பெருகிக் கொண்டே செல்வதால் நாங்கள் கால்நடைகளை வளர்க்க முடியாமல் திண்டாடுகின்றோம்.
அம்பை விவசாயி தர்மலிங்கம்: மேல அம்பாசமுத்திரத்தில் 42 சென்ட் அரசு இடம் உள்ளது. அதில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். (இதை தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களில் 41 கிலோ மூடைக்கு ரூ.45 வரை கூடுதல் பணம் கேட்பதாக முருகன் உள்ளிட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்) இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு