×

கே.வி.குப்பம் அருகே மாடு விடும் திருவிழா: 20 பேர் காயம்

கே.வி.குப்பம், மார்ச் 24: கே.வி.குப்பம் அருகே நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் ஆக்ரோஷத்துடன் ஓடியதில் காளைகள் தவறி விழுந்தன. பார்வையாளர்களை காளைகள் முட்டியதில் 20 பேர்‌ காயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த செஞ்சி கிராமத்தில் நேற்று மாடு விடும் திருவிழா நடைபெற்றது. விழாவினை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காண இளைஞர்கள் வந்திருந்தனர். முன்னதாக காளைகள் ஓடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சவுக்கு தடுப்புகள், ஓடு பாதையில் கொட்டபட்டிருக்கும் திடமான மண் ஆகியவற்றை வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், பரதராமி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா மாநிலம் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டு வரப்பட்ட சுமார் 200 காளைகள்‌ ஓட தயார் நிலையில் வாடி வாசலில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகே தகுதியுடைய காளைகள் ஓட அனுமதி அளித்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 5 காளைகள் திருப்பி அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து சப் கலெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் விழா குழுவினர் உறுதி மொழி ஏற்ற பின் விழா தொடங்கியது. வாடி வாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

காளைகள், இளைஞர்கள் மத்தியில் சீறி பாய்ந்தது.‌ சில காளைகள் வாடிவாசலிலே ஓட தொடங்க முற்படும்போது விழுந்து காயமானது. சில காளைகள் ஓடும் பாதையின் நடுவே மீண்டும் வாடி வாசலை நோக்கி ஓடியதால் ஓடும் பாதையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். காளைகள் ஓடுபாதையின் இருபுறமும் விசில் அடித்தும், கூச்சல் போட்டும், மாட்டின்‌மீது கை போடுவதும் என இளைஞர்கள் சிலர் ஆரவாரம் செய்தனர். குறிப்பிட்ட தூரத்தை விரைவாக அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம், இரண்டாம் பரிசாக 80 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 60 ஆயிரும் என 51 பரிசுகள் விழாவின்‌ முடிவில் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

காளைகள் ஓடி வந்த வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. காளைகள் முட்டியதில் 18 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த சுகாதார துறையினர் மூலம் முதலுதவி சிகிச்சை செய்துகொண்டனர். அதில் 2 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். தாசில்தார் கீதா தலைமையிலான வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி பழனி‌ தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு, பொதுப்பணி, மின்சார, சுகாதார, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் தயாரான நிலையில் இருந்தனர்.

Tags : Cow shedding festival ,KV Kuppam ,
× RELATED ரம்ஜான் நெருங்கும் நிலையில்...