×

ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக இன்ஜின் டிரைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 21: ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக ரயில் இன்ஜின் டிரைவர்கள் (லோகா பைலட்) சங்கத்தினர் மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவாயில் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரயில்வே இன்ஜின் டிரைவர்களுக்கு எதிராக ரயில்வே நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை எதிர்த்து எஸ்ஆர்எம்யூ இன்ஜின் டிரைவர்கள் பிரிவு சார்பில் மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவாயில் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். தலைவர் ஏ.எம்.எம்.ரவிசங்கர் முன்னிலை வகித்தார். எஸ்ஆர்எம்யூ. மதுரை கோட்டச்செயலாளர் ஜே.எம்.ரபீக். உதவி கோட்டச்செயலாளர் வி.ராம்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ரயில் இன்ஜின் டிரைவர்கள் வெளியூர்களில் ஓய்வெடுக்கும்போது செல்போன்களை ஓய்வு அறையின் பராமரிப்பாளரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
பெரும்பாலான ஓட்டுநர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நடை பயிற்சி செய்வது அவசியம். ஆனால், அவர்கள் ஓய்வு அறையிலிருந்து வெளியில் செல்லக்கூடாது என்று நிர்வாகம் கூறுவது கண்டிக்கத்தக்கது. ரயில் இன்ஜின்களில் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும். ஓட்டுநர்கள் 9 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்யுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்தக்கூடாது.
கோவிட் காலத்தில் முழு நாடும் முடக்கத்தில் இருந்தது, ஆனால் ரெயில் ஓட்டுநர்கள் மட்டுமே நாட்டின் நலனுக்காக அத்தியாவசியப் பொருட்களை நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு கொண்டு சேர்த்து சேவை செய்தனர்.

எனவே ரயில்வே வாரியம் ரெயில் ஓட்டுநர்களின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய செயல்களை கைவிட்டு பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ரயில் இன்ஜின் டிரைவர்கள் பிரிவு உதவி கோட்டச்செயலாளர்கள் முத்துக்குமார், நித்யராஜ், முத்துகிருஷ்ணன், கருப்பையா, செந்தில்முருகன், கிறிஸ்டோபர், மணிமாறன், அருண்குமார் மற்றும் மதுரை கோட்டத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட இன்ஜின் டிரைவர்கள், உதவி டிரைவர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது