×

திருக்கனூரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை

திருக்கனூர், மார்ச் 20: புதுச்சேரியில் இந்த மாத துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வந்தது. நேற்று மாலை புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் திருக்கனூர், கூனிச்சம்பட்டு, செட்டிபட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. அப்போது திடீரென வானத்திலிருந்து ஆலங்கட்டிகள் (ஐஸ்கட்டிகள்) மழையாக சாலைகளிலும், வயல்வெளிகளிலும் கட்டி கட்டியாக விழுந்தது. ஓடு போட்ட வீடுகளின் மீது விழுந்த ஆலங்கட்டி மழையால் சத்தம் அதிக அளவில் கேட்டதால் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர்.

இந்த ஆலங்கட்டி மழையால் கடந்த சில நாட்களாக நிலவிய பூமியின் வெப்பம் தணிந்து குளிச்சியடைந்தது. ஒருசில இடங்களில் பொருள் சேதம் அடைந்தாலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிறிது சிரமம் அடைந்தாலும் ஆலங்கட்டி மழையை பார்த்து ரசித்தனர். இதனை சிறுவர்களும், பெரியவர்களும் கையில் எடுத்து அதை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந்த திடீர் ஆலங்கட்டி மழையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thirukanur ,
× RELATED திருக்கானூர் கரும்பஸே்வரர் கோயிலில் சூரிய பூஜை