×

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி

சேலம், மார்ச் 19: சேலத்தில் நிரப்பிரச்னை காரணமாக கமிஷனர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சகோதரர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு அதே பகுதியில் 40 சென்ட் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இவரது  பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் தேவராஜ். இருவருக்கும் நிலபிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக இருதரப்பினரும், பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதில் தேவராஜ் தரப்பினர், நிலத்திற்கான ஆவணத்தை போலீசாரிடம் காட்டினர். ஆனால் நாகராஜன் தரப்பினர் எந்த ஆவணங்களையும் காட்டவில்லை. நேற்று அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு தேவராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையறிந்து வந்த நாகராஜன் தரப்பினர் அவரை தடுத்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாகராஜனின் மகன்கள் பிரகாஷ் (27), சாரதி (30) ஆகியோர், பெட்ரோலை வாங்கிக்கொண்டு டூவீலரில் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கமிஷனர் அலுவலக கேட் அருகே நின்று கொண்டிருந்த வெடிகுண்டு நிபுணர்கள் அவர்களை தடுத்தனர். ஆனால் அவர்களை தள்ளிவிட்டு டூவீலரில் வேகமாக பிரகாஷ், சாரதி ஆகியோர் கமிஷனர் அலுவலக வளாகத்திற்குள் சென்றனர். பின்னர், கமிஷனர் கார் நிறுத்தும் இடத்தில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து பிரகாஷ் தனது தலையில் ஊற்றிக்கொண்டு சத்தம் போட்டார். அவர்களை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் பிரகாஷ் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர். இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அப்போது, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் ராணி, ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார். எங்களை கைது செய்து விடுவோம் என மிரட்டுகிறார் என கூறினர். அப்போது அங்கு வந்த துணை கமிஷனர் லாவண்யா இருவருக்கும் அறிவுரை வழங்கினார். இதுகுறித்து அம்மாப்பேட்டை உதவி கமிஷனர் சரவணகுமரன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்