கமுதி: கமுதி பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. மாவட்டத்தின் முக்கியமான பேரூராட்சியாக விளங்கும் இப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர், இங்குள்ள செட்டியூரணி பகுதியில் போர்வெல் அமைக்கப்பட்டும், மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வரும் குடிநீரை மேல் நிலை நீர்தேக்க தொட்டிகளில் தேக்கி, பைப் லையன் மூலமாக, வீடுகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் குடிநீரை விநியோகம் செய்வதில் பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டி வருகின்றனர். வசதி படைத்தவர்கள், தொழிலதிபர்கள் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உள்ள தெருக்களுக்கு மட்டும் தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். சில பகுதிகளில் தினந்தோறும் இடைவிடாமல் மூன்று மணி நேரத்திற்கு மேல் வருவதால், பொதுமக்கள் அந்த குடிநீரை பிடிக்காமல், தெருக்களிலும், கழிவுநீர் வாறுகாலிலும் குடிநீர் வீணாகி வருகிறது. சிலர் தாங்கள் வைத்துள்ள பூஞ்செடிகள் உள்ள தோட்டத்திற்கு இந்த குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.
