சாத்தூர்: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.2.50 கோடி மதிப்பில் மண்டபங்கள் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இக்கோயிலில் பக்தர்களுக்கு இருந்த விருந்து மண்டபங்களை பயண்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் அப்பகுதியில் இருக்கும் புளிய மரங்களின் நிழலில் திறந்த வெளியில் விருந்து கொடுத்துவந்தனர். பக்தர்கள் சிரமத்தை போக்கும் விதமாக விருந்து மண்டபங்கள் அமைக்க கோயில் நிா்வாகம் சாா்பில் நிதி கோரப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையையேற்று இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கு விருந்து மண்டபங்கள் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கடந்தாண்டு ஜுன் மாதம் தொடக்கி வைத்தார். இந்த மண்டபங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கோவில் இணை ஆணையாளர் கருணாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.