ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் மழைநீரில் நனைந்து நாசம்

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் பகுதியில் பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இங்கு, உட்பிரகாரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக தற்காலிக உண்டியல் இந்து சமய அறநிலையத்துறை மூலம் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் காணிக்கை 3 மாதத்திற்கு ஒருமுறை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி முன்னிலையில் திறந்து எண்ணப்படும். அந்தவகையில், நேற்று முன்தினம் காலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. அப்போது, 3 உண்டியல்களில் உள்ள 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மழைநீரில் நனைந்து நாசமானது தெரியவந்தது. மழை சாரல்பட்டு பணம் நனைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Related Stories: