×

கம்மாபுரம் அருகே காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்


விருத்தாசலம், மார்ச் 4: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள கோ. மாவிடந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட கோ. பொன்னேரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மூலம் பொது மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மின் மோட்டார் பழுதடைந்து நீரேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நிர்வாகத்தினர் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் தலைமையில் விருத்தாசலம்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் கோ.பொன்னேரி பேருந்து நிறுத்தத்தில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற கம்மாபுரம் போலீசார் மற்றும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர்.  அப்போது தண்ணீர் கசியக்கூடிய பெரிய நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். மினி மோட்டார் அமைத்து தர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதை தொடர்ந்து குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்கள் உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பு காணப்பட்டது. இதில் கிளை செயலாளர்கள் வீரமணி, லட்சுமி, மாதர் சங்க வட்ட செயலாளர் ஜெயலட்சுமி, வாலிபர் சங்க வட்ட குழு உறுப்பினர் சதிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kammapuram ,
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...