கள்ளிக்குடி சமத்துவபுரத்தில் மக்களிடம் குறைகளை கேட்ட கலெக்டர்

திருமங்கலம்: கள்ளிக்குடி சமத்துவபுரத்தில் நேற்று கலெக்டர் ஆய்வு நடத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உலாகணி பஞ்சாயத்தில் சமத்துவபுரம் அமைந்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நீண்ட போராட்டத்திற்கு பின்பு இந்த சமத்துவபுரத்தில் பொதுமக்கள் குடியேறினர். மொத்தமுள்ள 100 வீடுகளில் தற்போது 95 வீடுகளில் பொதுமக்கள் குடியிருக்கின்றனர். 5 வீடுகள் குடியிருக்க முடியாத அளவில் சேதமடைந்துள்ளதால் அங்கிருந்தவர்கள் வீட்டினை காலி செய்து விட்டு வெளியே சென்று விட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் தற்போது சமத்துவபுரங்களில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. 13 ஒன்றியங்களில் முதற்கட்டமாக 7 ஒன்றியங்களில் உள்ள சமத்துவபுரங்களில் மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள 6 ஒன்றியங்களில் விரைவில் மராமத்து பணிகள் நடைபெற உள்ள நிலையில் அதில் ஒன்றான கள்ளிக்குடி சமத்துவபுரத்தினை நேற்று கலெக்டர் அனிஷ்சேகர் நேரில் ஆய்வு செய்தார். அங்கு குடியிருக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். குடிநீர் வசதி, சாலை வசதிகள், பஸ் போக்குவரத்து, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும் எனவும், இடியும் நிலையில் பலரது வீடுகள் உள்ளதால் மராமத்து செய்யவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அரசு இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யும் போது கள்ளிக்குடி ஒன்றிய சமத்துவபுரத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கள்ளிக்குடி ஓன்றிய ஆணையாளர்கள் தர்மராஜ், இளங்கோ,பொறியாளர்கள் கமலி, செல்வி, அமுதா மற்றும் பஞ்சாயத்து தலைவா் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: