மஞ்சூர்:மழையால் பாதிக்கப்பட்ட மஞ்சூர் இத்தலார் சாலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து எடக்காடு, எமரால்டு, இத்தலார் வழியாக ஊட்டிக்கு சாலை வசதி உள்ளது. இவ்வழிதடத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளதால் அரசு பஸ்கள், தனியார் வாகனப்போக்குவரத்து மிகுதியாக இருக்கும். மேலும் எமரால்டு அணை, அவலாஞ்சி சுற்றுலா பகுதிகள் உள்ளதால் சுற்றுலா பயணிகளும் இவ்வழியாக வாகனங்களில் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையில் இத்தலார் அருகே சாலையோரத்தில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதிப்புகுள்ளான பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு தடுப்புசுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகளை நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
