தேவசகாயம் புனிதர் பட்டம் நன்றி கொண்டாட்டம் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள அழைப்பு ஆயர் நசரேன் சூசை பேட்டி

ஆரல்வாய்மொழி, ஜூன் 4:  ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் மறைசாட்சி தேவசகாயம் புனிதர் பட்டம் தேசிய நன்றி கொண்டாட்ட விழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ளவேண்டும் என்று   ஆயர் நசரேன் சூசை வேண்டுகோள் விடுத்தார். மறைசாட்சி தேவசகாயத்திற்கு கடந்த மாதம் 15ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது . இதன் தேசிய நன்றி கொண்டாட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் பிரமாண்ட வளாகத்தில்  வருகிற 5ம் தேதி பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை நேற்று விழா நடக்கும் வளாகத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .

அப்போது அவர் கூறியது:

வருகிற 5ம்தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 2.30 மணிக்கு புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்திற்கு தேசிய அளவிலான நன்றி கொண்டாட்ட விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வானது  கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்படுகிறது .மாலை 4 மணிக்கு ஆன்றோர் வரவேற்பும், மாலை 5 மணிக்கு நம்பிக்கையில் உறுதி சமத்துவம்  ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது .

 நன்றி கொண்டாட்ட நிகழ்வுக்கு  தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து  சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெறும் விதத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது.  பல மாவட்டங்களிலிருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் வருகின்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான  வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக மருத்துவ வசதிகள் மருத்துவ அவசர சிகிச்சை வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . முழுநேர தகவல் உதவி மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பொதுமக்களும் அருட்பணியாளர்கள், துறவியர் மற்றும் முக்கிய அழைப்பாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக வாகன நிறுத்துமிடங்கள் செய்யப்பட்டுள்ளன.   நிகழ்ச்சிக்கு திருத்தந்தையின் இந்திய தூதர் லெயோ போல்டா ஜிரல்லி கலந்து கொள்ள இருக்கிறார்.  திருப்பணி பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்பதால் அனைத்து மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த அனைத்து சமுதாய பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும் . அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகின்ற பொதுமக்களின் வசதிக்காக மார்த்தாண்டம், தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில்  இருந்து சிறப்பு வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  இவ்வாறு ஆயர் நசரேன் சூசை தெரிவித்தார் .

இந்நிகழ்ச்சியில் அருட்பணியாளர்கள்  கிலாரியஸ் ,  ஜான் குழந்தை,  அலாய் சியஸ், மரிய வின்சன்ட் , ஆரல் பேரூராட்சி  கவுன்சிலர்கள் ஜனட் சதீஷ்குமார்,ஜேக்கப் மனோகரன், முன்னாள் ஊராட்சி  உறுப்பினர் சதீஷ்குமார் மற்றும் ஆரல் பங்கு பேரவையை சேர்ந்த பென்சிகர் பவுல்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: