திருச்செந்தூரில் தடையை மீறி பாஜ ஊர்வலம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரதமர் மோடி அரசின் 8ம் ஆண்டு சாதனையை விளக்கி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ மகளிரணி சார்பில், திருச்செந்தூரில் நேற்று ஊர்வலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு மகளிரணி மாவட்ட செயலாளர் தேன்மொழி தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். பாஜ மாநில துணை தலைவர் சசிகலாபுஷ்பா, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், தெற்கு மாவட்ட பாஜ தலைவர் சித்ராங்கதன், மகளிரணி மாநில பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், வர்த்தகரணி தலைவர் ராஜக்கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மகளிரணியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். போலீசார், ஊர்வலத்திற்கு அனுமதியில்லை எனக்கூறி திருச்செந்தூர் காமராஜர் சாலையருகே தடுப்புகள் ஏற்படுத்தினர். அப்போது போலீசாருடன் சசிகலாபுஷ்பா மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஊர்வலத்துக்கு அனுமதியில்லை, மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து ஊர்வலத்தை கைவிட்டு பாஜவினர், பஸ் ஸ்டாண்ட் முன்பு மோடி அரசின் சாதனை விளக்க கூட்டம் நடத்தினர். இதில் மருத்துவரணி மாநில செயலாளர் பூபதிபாண்டியன், மாவட்ட துணை தலைவர் வக்கீல் வாரியார், நகர தலைவர் நவமணிகண்டன், இணை செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: