திருவாடானை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோர காய்கறி கடைகள்

திருவாடானை, மே 18: திருவாடானையில் வாரந்தோறும் திங்கட் கிழமையன்று அரசு மருத்துவமனை அருகில் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கல்லூர், அச்சங்குடி, ஆதியூர், குளத்தூர், தினையத்தூர், பாண்டுகுடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு தேவையான காய்கறிகள், மீன் இறைச்சிகள் மற்றும் பழ வகைகளை வாங்கிச் செல்ல இந்த சந்தைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த வாரச்சந்தை நடைபெறும் வளாகத்தில் காலியிடங்கள் போதுமான அளவு இடவசதி இருக்கிறது. ஆனாலும் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு சில வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் அந்த இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் போது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி படுகின்றனர்.

மேலும் அத்தியாவசிய தேவைக்காக இந்த வாரச்சந்தைக்கு காய்கறிகளை வாங்க இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் போக்குவரத்து விதிகளை மீறி ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திச் செல்வதால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக காவல்துறை சார்பில் அவர்களுக்கே தெரியாமல் இ-சலான் மூலம் அபராதம் விதிப்பதாகவும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ஆகையால் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த இடத்தை விட்டு சந்தை வளாகத்திற்குள் அந்த சாலையோர கடைகளை அமைக்கும் வகையில் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதனால் சாலையின் இருபுறங்களிலும் காலியாக உள்ள இடங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஏதுவாக இருக்கும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: