சென்னையில் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் வாழ தகுதியற்றவை 15 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் 2,400 கோடியில் கட்ட நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சென்னையில் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் வாழ தகுதியற்றவையாக உள்ளது என்றும், புதிதாக 15 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ₹2,400 கோடியில் கட்டப்படும் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.திருவொற்றியூர் கிராம தெரு திட்ட பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 319 குடியிருப்புதாரர்களுக்கு கருணை தொகையாக ₹76.56 லட்சம் காசோலை,  கருணை அடிப்படையில் 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழச்சி நடந்தது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று காசோலை, பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி 48 குடியிருப்பு கொண்ட ஒரு கட்டிட தொகுப்பில்  24 குடியிருப்புகள் முழுவதுமாக சேதமடைந்து இடிந்து விழுந்தது.

இப்பகுதியில் தற்போதுள்ள 288 பழைய குடியிருப்புகளை  இடித்து விட்டு 410 ச.அடி பரப்பளவில் ₹53.96 கோடியில் 360 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படவுள்ளது. குடியிருப்புதாரர்கள் குடியிருப்புகளை  காலி செய்த பின்பு  இப்பழைய அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டு தரமான பொலிவான புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் இன்னும் 15 மாதத்தில் கட்டி தரப்படும். சென்னையில் மட்டும் 27,500 அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் வாழ தகுதியற்ற  வீடுகளாக கண்டறியப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட வீடுகள் அனைத்தும் படிப்படியாக இடித்து அதே பகுதியில் உள்ள மக்களுக்கு அங்கேயே  புதிய  வீடுகள் கட்டி வழங்கப்படும். 2021-22ம் ஆண்டு அறிவிப்பின்படி ₹1200 கோடியில் 7500 வீடுகளும்,   2022-23ம் ஆண்டு ₹1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக மொத்தம் ₹2400 கோடி மதிப்பீட்டில் 15000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் வரும் ஆண்டுகளில் படிப்படியாக இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ்,  சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர்,  திருவொற்றியூர் மண்டல தலைவர் தனியரசு, கவுன்சிலர்கள் உமா சரவணன், சரண்யா, வாரிய தலைமை பொறியாளர் ராம சேதுபதி, மேற்பார்வை பொறியாளர் எஸ்.எட்வின்சாம் , நிர்வாகப் பொறியாளர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: