பல லட்சம் மதிப்பிலான மாத்திரை,மருந்துகள் வீணான அவலம்

விருதுநகர்,ஏப்.21: விருதுநகர் நகராட்சியில் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை உள்ளது. பழமையான மருத்துவமனையில் பிரசவம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தினசரி 500க்கும் மேற்பட்ட நகர, கிராமப்புற மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ள நிலையில், மருந்து மாத்திரைகளை 200 மீ தூரமுள்ள நகராட்சி வரிவசூல் மையத்திற்கு அருகில் உள்ள மூடப்பட்ட நகராட்சி நூலக அறையில் இருப்பு வைத்து, எடுத்து நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். இந்த அறையை ஒட்டி நகரின் ஒட்டுமொத்த கழிவுநீர் செல்லும் பிரமாண்ட கழிவுநீர் வாறுகால் பழைய பஸ் நிலையம் வழியாக செல்கிறது.

கடந்த வாரம் பெய்த மழையில் மாத்திரை, மருந்து இருப்பு வைத்திருந்த அறைக்குள், வாறுகாலில் இருந்து கழிவுநீரும், மழைநீரும் உள்புகுந்துள்ளது. மழைநீர் உள்புகுந்ததை மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் யாரும் நேற்று வரை கண்டு கொள்ளவில்லை. நேற்று மதியம் இருப்பு அறையில் இருந்து மருந்து, மாத்திரைகளை எடுக்க பணியாளர் திறந்த போது தூர்நாற்றத்துடன் மாத்திரைகள் நனைந்து கிடந்துள்ளது.

மருத்துவரிடம் கூற, அப்படியே விநியோகம் செய்தால் மாத்திரைகள் துர்நாற்றம் அடிக்கும், அதை கழுவி நோயாளிகளுக்கு வழங்க மருத்துவர் உத்தரவிட்டதாக கூறி ஊழியர் ஒருவர் மாத்திரைகளை தண்ணீர் வாளியில் போட்டு கழுவி உள்ளார். பொதுமக்கள் உள்ளே நுழைந்த போது மாத்திரைகளை கழுவிய பெண், அறையை திறந்து போட்டு மாத்திரைகளையும் அப்படியே போட்டு விட்டு தண்ணீர் வாளியுடன் வெளியேறி விட்டார்.

சுகாதார துணை இயக்குநர் கலுசிவலிங்கம், கழிவுநீரில் நனைந்த மாத்திரைகளை நோயாளிகளுக்கு விநியோகம் செய்ய கூடாது. சுகாதார ஆய்வாளர்களை கொண்டு ஆய்வு செய்து மாத்திரைகளை காலாவதி செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

Related Stories: