பங்குனி பெருவிழாவையொட்டி அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் திருவீதியுலா: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி,  அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி திருவீதியுலா காட்சி நடந்தது. இதில்,  பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவதலங்களில் மிகவும்  பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி  பெருவிழா 10 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு  பங்குனி பெருவிழா மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பவளக்கால் விமானத்தில்  திருவீதியுலா நடந்தது. அன்றிரவு இரவு 10  மணியளவில் அம்மை மயில் வடிவம் சிவ பூஜை காட்சி நடந்தது.  புன்னை மரம்,  கற்பக மரம், வேங்கை மர வாகனங்கள் வீதியுலா நடந்தது.  இரண்டாவது நாள் நேற்றுமுன்தினம்  காலை 8.30 மணியளவில் சூரிய வட்டம்,  இரவு 9 மணியளவில் சந்திர வட்டம்,  கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடந்தது.

தொடர்ந்து  மூன்றாவது நாளான நேற்று முக்கிய நிகழ்வாக கருதப்படும் அதிகார நந்தி காட்சி  வரலாற்று சிறப்பு வாய்ந்தது. ரிஷபத்தின் முகமும் (காளையின் முகம்) சிவனின்  உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். `அதிகார நந்தியின் சேவை’ சரியாக நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. அதிகார  நந்தி வாகனத்தில், கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் சர்வ அலங்காரத்தில்  நான்கு மாட வீதிகளில் திருவீதியுலா வந்தார். அதிகார நந்தி வாகனத்தை பின்  தொடர்ந்து, கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்விடை வாகனங்களில் பரிவார  தேவதைகள் உடன் வந்தனர். தொடர்ந்து திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா  நடந்தது.

அதிகார நந்தி வாகன வீதியுலாவில் பக்தர்கள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். மாட வீதிகளில் சுவாமி திருவீதியுலா வருவதையொட்டி ராமகிருஷ்ணா மடம்  சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பஸ்கள், மற்றும் இரு சக்கர  வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களில் சுவாமி திருவீதியுலா  காட்சி நடந்தது. விழாவையொட்டி, இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு  அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று  காலை 9.15  மணி முதல் வெள்ளி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனங்களில் சுவாமி  திருவீதியுலாவும், இரவு 9 மணியளவில் நாகம், காமதேனு, ஆடு வாகனங்களில்  திருவீதியுலாவும் நடக்கிறது. இதை தொடர்ந்து நாளை காலை 8.30  மணியளவில் சவுடல் விமானமும், இரவு 10 மணியளவில் வெள்ளி ரிஷப வாகன  காட்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம்  மார்ச்  15ம் தேதிக்கும், மார்ச் 16ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்களோடு  திருக்காட்சியும் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories: