உக்ரைனில் இருந்து ராசிபுரம் திரும்பிய மாணவ, மாணவிகள்

ராசிபுரம், மார்ச் 10: உக்ரைனில் இருந்து ராசிபுரம் திரும்பிய மாணவ, மாணவிகள் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர். உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த ராமன்-லீலாவதி தம்பதியின் மகள் நர்மதா, விஜயகுமார்-ஹேமலதா தம்பதியின் மகன் ஜீவழகன் ஆகியோர், மருத்துவம் பயின்று வருகின்றனர். அங்கு போர் நடந்து வரும் நிலையில், மிகுந்த சிரமங்களுக்கிடையே, போலந்து பகுதியில் இருந்து நர்மதா, ஜீவழகன் ஆகியோர் ருமேனியா நாட்டை சென்றடைந்தனர்.

அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி, பாதுகாப்பாக டெல்லி அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம், டெல்லி வந்தடைந்த மாணவ, மாணவிகள் நேற்று சொந்த ஊரான ராசிபுரத்திற்கு வந்தனர். அவர்களை கண்ட பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாணவி நர்மதா கூறுகையில், நான் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகிறேன். தற்போது நடைபெறும் போரால் எனது படிப்பு பாதியிலேயே நின்று விட்டதால், அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மாணவன் ஜீவழகன் கூறுகையில், கார்கிவ் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

மீண்டும் அங்கு சென்று தன்னால் மருத்துவம் படிக்க முடியுமான என தெரியாததால், நம் நாட்டிலேயே மருத்துவ படிப்பை தொடர ஒன்றிய, மாநில அரசுகள் உதவ வேண்டும்,’ என்றார். மாணவர்கள் இருவரும் தங்களை பத்திரமாக மீட்டு, சொந்த ஊர் அழைத்து வந்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: