புதுகை அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் கதிரியக்க கருவி துவக்கம்

புதுக்கோட்டை, மார்ச் 4: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் கதிரியக்க கருவி மற்றும் கணினிமய கதிரியக்க முறை கருவிகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கதிரியக்கத் துறையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் கதிரியக்க கருவி மற்றும் ரூ.9.52 லட்சம் மதிப்பீட்டில் கணினிமய கதிரியக்க முறை என்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இக்கருவிகள் மூலம் குறைந்த செலவில் ஏழை எளிய மக்களுக்கு எக்ஸ்-ரே நிழற்படங்கள் கணினி தொழில் நுட்ப உதவியுடன் விரைவாகவும், தெளிவாகவும் எடுத்து நோயின் தன்மையை விரைவாக கண்டறிய இயலும். மேலும், குறைந்த கதிரியக்கம் அளவில் தெளிவான எக்ஸ்-ரே நிழற்படங்கள் எடுக்க முடியும். மேலும், அதி நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நிழற்படங்கள் எடுக்க முடியும் என்பதால் நோயின் தன்மையை எளிதாகவும், தெளிவாகவும் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை வழங்க இயலும்.

மேலும் இந்த எக்ஸ்-ரே நிழற்படங்களை நீண்ட காலத்திற்கு உபகரணத்தில் சேமித்து வைப்பதுடன், நோயாளிக்கு தேவையான நேரத்தில் நிழற்படங்களை பார்த்து சிகிச்சை அளிக்க முடியும். இக்கருவிகளில் அதி நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தபடுவதால் தொழில் நுட்ப உதவியாளர்கள் எளிதாக பயன்படுத்தலாம். இந்த அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் முதல் முறையாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைவது சிறப்பாகும். பின்னர் அமைச்சர்கள் அரசு மருத்துவக்கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலையை திறந்து வைத்து, மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினர். நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்.முத்துராஜா டிஆர்ஓ செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: