மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை மாத ஊஞ்சல் உற்சவ விழா

மேல்மலையனூர், பிப். 1: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பிரிசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை தின நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் தங்கள் குடும்பத்தினருடன் அம்மன் திருத்தலத்தில் தங்கி அருள் பெற்று செல்வதை பாக்கியமாக கருதி வந்தனர். இந்நிலையில் உலககெங்கும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த 2019 மார்ச் மாதம் முதல் ஊஞ்சல் உற்சவம் நிறுத்தப்பட்டு திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் யாருமின்றி அறங்காவலர்கள் மட்டும் எளிய முறையில் ஊஞ்சல் உற்சவத்தை இன்று வரை நடத்தி வருகின்றனர்.

தை மாத அமாவாசையான நேற்று காலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். மாலையில் உற்சவர் அங்காளம்மனுக்கு ராஜ ராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு கோயில் உட்பிரகாரத்தில் ஊஞ்சலில் அம்மனை அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி பூசாரிகள் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ராமு மற்றும் கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர். வளத்தி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் துணை ஆய்வாளர் ரவி மேற்பார்வையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தை அமாவாசையை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்திருந்த நிலையில் மாலையில் கூட்ட நெரிசல் அதிகரித்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மேல் மலையனூர் கோயிலில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஊஞ்சல் உற்சவத்துக்கு கடந்த 19 மாதத்துக்கு மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோய் தொற்று பரவலையடுத்து முக்கவசம் அணியாமல் அதிக பக்தர்கள் கோயில் வளாகத்தில் காணப்பட்டனர். இதனிடையே மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தி பக்தர்கள் முகக்கசவம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: