ஆவணங்களை முறையாக சமர்ப்பித்து சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தும் வேட்பாளர்கள்

சேலம், ஜன.29: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடுபவர்கள் நிலுவையில் இருந்த சொத்துவரி, குடிநீர் வரியை அந்தந்த மண்டல அலுவலகங்களில் செலுத்தி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று சேலம் மாநகராட்சி 60 வார்டுகளுக்கான வேட்பு மனு தாக்கல் 4 மண்டல அலுவலகங்களிலும் நடந்தது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நேற்று வேட்பு மனுவை பெற்றுச்சென்றனர்.

இந்த வகையில் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் 120 மனுவும், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் 40 மனுவும், அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் 91 மனுவும், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் 70 மனுவும் என்று முதல்நாளில் மொத்தம் 321 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது. நேற்று சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கும் வகையில் நிலுவையில் இருந்த சொத்துவரி, குடிநீர் வரியை அந்தந்த மண்டல அலுவலகத்தில் செலுத்தினர்.  

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் பெயரில் சொத்து இருந்தால் அதற்கான வரி மற்றும் குடிநீர் வரியை முறையாக செலுத்தி, நிலுவை இல்லை என்று மனுவுடன் ஆவணத்தை இணைக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு, ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் வரியை செலுத்தி வருகின்றனர்,’’ என்றனர்.

Related Stories: