திருத்துறைப்பூண்டி பகுதியில் விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு வரும் வெளி மாவட்ட நெல் மூட்டைகள்

திருத்துறைப்பூண்டி, ஜன.24: திருத்துறைப்பூண்டி வட்டார பகுதிகளில் சம்பா, தாளடி நெல் பயிர்கள் சுமார் 37,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது சம்பா அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனியார் நெட் சென்டர்களிலும் உடனடியாக பதிவு செய்ய முடியவில்லை. இந்நிலையில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தனியார் நெல் விற்பனையாளர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இங்குள்ள விவசாயிகள் மூலம் நெல் மூட்டைகளை ஆன்லைனில் வீட்டில் இருந்தோ அல்லது நெட் சென்டர்கள் மூலமாக பதிவு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து சுலபமாக போட்டு விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர்.

இதனை தடுக்க விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலயைங்களில் வைத்த பிறகே அங்குள்ள பில் கிளார்க் பதிவு செய்தால் மட்டுமே வெளி மாநில, மாவட்ட நெல் மூட்டைகள் வருவதை தடுக்க முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது இயங்கும் நெட் சென்டர்களில் பல இடங்களில் பதிவு செய்ய முடியவில்லை. பல நெட் சென்டர்களில் பதிவு செய்ய தெரியாமல் தடுமாறுகின்றனர். அதேபோல் நேரடி நெல் கொள்முதல் நிலயைங்களில் பல இடங்களில் பில் கிளார்க்குகள் பதிவு செய்ய தடுமாறுகின்றனர். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து திருப்பத்தூர் விவசாயிகள் சங்க கிராம கமிட்டி தலைவர் கோவிந்தராஜன் கூறியது: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா அறுவடை பணிகள் நடந்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்மூட்டைகளை போட முடியாமல் தவித்து வருகின்றனர். ஆன்லைன் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் போடுவதற்கு உடனடியாக பதிவு செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் பல நேரடி கொள்முதல் நிலையங்களில் பில் கிளார்க்குகள், தனியார் நெட் சென்டர்களில் பணியாற்றுபவர்களுக்கு பதிவு செய்ய தெரியவில்லை. அவர்களுக்கு அரசு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

அதே போல் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்த பின்னே பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வெளி மாநில, மாவட்ட நெல் மூட்டைகள் வருவதை தடுக்க முடியும். வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 10 லோடு லாரிகளில் நெல் மூட்டைகள் போடுவதற்கு கொண்டு வருகின்றனர். திருத்துறைப்பூண்டி பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்த குறுவை நெல்மூட்டைகள் விளக்குடி, கொக்கலாடி, சுந்தரபுரி ஆகிய சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பான குடோன்களுக்கு மாற்றினால் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் சம்பா நெல் மூட்டைகளை விரைவாக கொண்டு செல்ல முடியும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: