கிருஷ்ணகிரி, டிச.22: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள ஓமிக்ரான் வார்டில் மருத்துவ குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகள் கொண்ட ஓமிக்ரான் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. 6வது தளத்தில் அமைந்துள்ள இந்த வார்டை மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர். ஓமிக்ரான் வார்டில் தேவையான உபகரணங்கள், மருந்து பொருட்கள் தயார் நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்தனர். மேலும், தினமும் வார்டுகளை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளித்து காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். மருத்துவ உபகரணங்களின் செயல்பாடுகள் தினமும் கண்காணிக்கப்பட வேண்டும். அரசு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என அலுவலர்களை மருத்துவக்குழுவினர் வலியுறுத்தினர். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் சசிகுமார், இளங்கோ, செல்வி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் ராஜா, மது, நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.