கடலாடி அரசு கல்லூரி கழிப்பறையில் தண்ணீர் ‘கட்’ மாணவ, மாணவிகள் அவதி

சாயல்குடி, டிச. 5: கடலாடி அரசு கல்லூரி கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடலாடியில் கடந்த 202-3ல் அரசு கலை- அறிவியல்  கல்லூரி துவங்கப்பட்டது. இங்கு இளநிலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம்,  கணிதம், வணிகவியல், கம்யூட்டர் சயின்ஸ் வகுப்புகளில் சுமார் 450 மாணவ,  மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 207ம் ஆண்டு கடாலடி- சாயல்குடி  சாலையிலுள்ள சமத்துவபுரத்தில் இக்கல்லூரிக்கு ரூ.7.50 கோடி மதிப்பீட்டில்  புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

இக்கல்லூரியில்  மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக காவிரி  கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது குடிநீர் இணைப்பை  துண்டித்து கல்லூரிக்கு சப்ளையை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால்  தண்ணீரின்றி கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள்,  பெண் பேராசிரியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கல்லூரியில்  அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்று தண்ணீரை கட்டிடத்தின் மாடியிலுள்ள நீர்தேக்க  தொட்டியில் நிரப்பி வந்தனர். ஆனால் அந்த உப்பு தண்ணீரால் புதிய கட்டிடம்  சேதமடைந்து வருவதுடன், மேற்கூரையும் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும்  தொடர் மழையால் வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் இருக்கைள்,  நோட்டு- புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து வருவதாக மாணவர்கள் புகார்  தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்லூரிக்கு மீண்டும்  காவிரி கூட்டு குடிநீர் வசதியை செய்து தருவதுடன், மழைநீர் ஒழுகும்  கட்டிடங்களை மராமத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: