கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா விதிகளை மீறிய 14 காய்கறி கடைகளுக்கு சீல்: சிஎம்டிஏ அதிகாரிகள் நடவடிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா விதிகளை மீறிய 14 கடைகளுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்தனர்.  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், எச்சில் துப்ப கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனை மீறி செயல்படும் தனி நபர் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா விதிகளை கடைபிடித்து கடைகள் செயல்பட வேண்டும் என சிஎம்டிஏ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் கடைகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என சிஎம்டிஏ நிர்வாகம் பறக்கும் படை மூலம் ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, காய்கறி மார்க்கெட்டில் நேற்று நடத்தப்பட்ட திடீர் ஆய்வில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 14 கடைகளை சிஎம்டிஏ அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து, சிஎம்டிஏ அதிகாரி கோவிந்தராஜ் கூறுகையில், ‘கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவலை தடுக்க தினந்தோறும் விழிப்புணர்வு செய்து வருகிறோம். அதேபோல் ஒலிப்பெருக்கி மூலமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், உருது  உள்ளிட்ட பல மொழிகளில்  விழிப்புணர்வு செய்து வருகிறோம். பறக்கும்படை மூலமாக, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றோம். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றோம்’  என்றார்.

Related Stories:

>