ராமேஸ்வரம் பகுதியில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் கலெக்டர் நேரில் ஆய்வு

ராமநாதபுரம், ஏப்.16:  ராமேஸ்வரம் நகராட்சியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளான வார்டு எண் 13 மற்றும் 18ல் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ராமேஸ்வரம் பகுதியில் மட்டும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் குறித்து களஆய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய இடமான ராமேஸ்வரத்தில் கூடுதல் கவனம் செலுத்திடும் வகையில் ராமேஸ்வரம் ரயில் நிலையம் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி கட்டணம் செலுத்து சாவடி ஆகிய இடங்களில் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து கண்காணித்திட 2 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கலலூரி மருத்துவமனை, 59 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 33 மினி கிளினிக்குகள் என மொத்தம் 93 இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 39,962 பேருக்கு முதல் தவனை தடுப்பூசியும், 7,278 பேருக்கு இரண்டு தவனை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Related Stories: