அம்பத்தூர் மண்டலத்தில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

அம்பத்தூர், ஏப்.15: அம்பத்தூர் வெங்கடாபுரம் கண்ணையா செட்டி தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருவை பயன்படுத்தி, மக்கள் விஜயலட்சுமிபுரத்திற்கும் சென்று வருகின்றனர். இந்த தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த நீரானது சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “கண்ணையா செட்டி தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. மேலும், சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது.

இதனால், பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியது. இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும், அந்த வழியாக சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றபோது கழிவுநீர் பாதசாரிகள் மீது தெளித்தன. இதனால் அவர்களது உடைகள் பாழானது. இதன் காரணமாக, அவர்கள் தங்களது பணிகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும், சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் இந்த கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பியும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கண்ணைய்யா செட்டி தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

Related Stories: