செல்போன் வெடித்து தீ விபத்து

பெரம்பூர்: கொளத்தூர் பாலகுமாரன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கமலா(64). இவர் நேற்று முன்தினம் மாலை தனது செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு மறந்து விட்டார். சிறிது நேரத்தில் செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் தீப்பற்றி வீட்டிலிருந்த வாஷிங் மெஷின், மேஜை உள்ளிட்ட பொருட்கள் எரியத் தொடங்கின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து தீயை அணைத்தனர்.

அதற்குள் வாஷிங் மெஷின், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. செல்போன் வெடிக்கும் நேரத்தில் கமலா வெளியே சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கொளத்தூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெயில் காலங்களில் செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு அப்படியே விட்டு விட்டால் அது அதிக சூடாகி தீ விபத்துக்கு அதுவும் ஒரு காரணமாகலாம். எனவே கோடை காலத்தில் உரிய முறையில் செல்போன் பயன்பாட்டை வைத்துக்கொள்ள வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் கூறினர்.

Related Stories: