தீயாய் பரவும் கொரோனாவை தடுக்க மாவட்டத்தில் 220 காய்ச்சல் முகாம்கள் கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் பேட்டி

மதுரை, ஏப். 13: கொரோனா 2வது அலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட  கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் தலைமை வகித்தார். இதில், கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் சுகாதாரத்துறை, உள்ளாட்சிதுறை, போலீசார் கலந்து கொண்டனர்.  இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘மதுரையில் இரண்டாம் கட்ட கொரோனா அலை மிகத் தீவிரமாக உள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் 193 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதிலும் 220 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய மரபணு மாற்ற வழிமுறைகளினால் தொற்று அதிகரிக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்கான தீர்வு 2 வழிகள்தான். ஒன்று முகக்கவசம், மற்றொன்று சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகும். மாவட்டத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றாத நபர்களிடம் இருந்து கடந்த 11 நாட்களில் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், வீட்டில் இருந்து வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க 2 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 25 சதவீதம் படுக்கையில், நோயாளிகள் உள்ளனர். இன்னும் 75 சதவீதம் படுக்கைகள் காலியாக உள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது, கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து புனே ஆய்வுமையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திகொள்ளலாம். இதுவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 958 பேருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலமாக காவல்துறை மூலமாக முகக்கவசம் அணியாதவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளோம், அபராத விதிப்புகளின் போது இலவசமாக முகக்கவசங்களை வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்யும். திருவிழாக்கள் தொடர்பாக அரசின் முடிவை தற்போது கடைபிடிக்கிறோம்’’ என்றார்.

Related Stories: