குமரியில் போலீஸ் அதிகாரிகள் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் கும்பல்

நாகர்கோவில், ஏப்.10 :  குமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயரில் பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி பண உதவி கேட்பது போல் நடித்து ஆயிரக்கணக்கில் பணத்தை பறிக்கும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். நம்பர்களை வாங்கி லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பல், தற்போது மேலும் ஒரு புதுவித மோசடியில் இறங்கி உள்ளனர். பிரபலமானவர்களின் பெயர்களில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதன் மூலம் அவர்களின் நண்பர்களிடம் இருந்து பணம் பறித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலமாக குமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பணம் பறிப்பது அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் சுசீந்திரம் எஸ்.ஐ. ஒருவரின் புகைப்படத்துடன், பேஸ்புக் கணக்கு தொடங்கி இக்கட்டான நிலையில் இருக்கிறேன். அவசரமாக மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுகிறது என பதிவிட்டுள்ளனர். நண்பர்கள், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.யை போனில் தொடர்பு கொண்ட போது தான் அது போலியான பேஸ்புக் கணக்கு என்பது தெரிய வந்தது.

ஒருசிலர் இது போன்று போலீஸ் அதிகாரிகளின் பெயரில் வரும் போலி பேஸ்புக் கணக்குகளை நம்பி போன் பே, கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பியும் வைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு போனில் விபரத்தை கேட்ட பின் தான் போலி பேஸ்புக் கணக்கு என்பது தெரிய வருகிறது. சிலர் பணம் அனுப்புவதற்கு முன், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிந்து கொண்டதால் பணம் தப்பியது.  சிலர் அவசர கதியில் பணத்தை அனுப்பி வைத்து விட்டு ஏமாந்து விடுகிறார்கள். இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. குமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர்களில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ள விபரத்தை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலி பேஸ்புக்கில் வரும் பதிவுகளை நம்பி, யாரும் பணத்தை இழந்து விட வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: