கூட்டணி கட்சி உறுப்பினர்களையே விலை கொடுத்து வாங்கும் அரசியலை பாஜக நடத்துகிறது: திருமாவளவன் பேச்சு

நாகை, மார்ச் 31: நாகை அவுரித்திடலில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: தமிழகத்தில் தாமரை, இட்டை இலை, மாம்பழம் என்ற மூன்று சின்னங்களில் பாஜக போட்டியிடுகிறது. இரட்டை இலை, மாம்பழம் என்று எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் அது பாஜகவையே சேரும். தமிழகத்தில் ஒரு கோடி தொண்டர்களை பெற்றுள்ள கட்சி திமுக. இதை எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது.

நான் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்ற விட மாட்டேன். ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள மாட்டேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதில் வெற்றியும் கண்டார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். அதிமுக தொண்டர்களுக்கு இவர்கள் துரோகம் செய்துவிட்டனர். பாஜகவின் பினாமி கட்சியாக பாமக மாறிவிட்டது.

மோடி நினைப்பதை எடப்பாடி பழனிசாமி செய்கிறார். அமித்ஷா நினைப்பதை பன்னீர்செல்வம் செய்கிறார். டெல்லியில் இருந்து தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. கூட்டணி கட்சி உறுப்பினர்களையே விலை கொடுத்து வாங்கும் கேவலமான அரசியலை பாஜக நடத்துகிறது. தமிழகத்தை பாதுகாக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

மயிலாடுதுறை:

செம்பனார்கோவில் கடைவீதியில் பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்து பேசியதாவது: பாஜக என்ற பாசிச கட்சியானது பொதுமக்கள் பிரச்னைக்காக எந்த போராட்டத்தையும் நடத்தாது. மதவெறி பிடித்து அலைகிறது பாஜக. மகாத்மாவை சுட்டு கொன்ற கோட்ஷே ஒரு ஆர்எஸ்எஸ்காரர். காமராஜரை டெல்லியில் உயிரோடு எரித்து கொல்ல முயன்றவர்கள் இந்த பாஜகவினர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: