அமைச்சர் வீரமணிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய கூடாது: உயர்நீதி மன்றத்தில் புகார்தாரர் மனு

சென்னை: அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று புகார்தாரர் தரப்பில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அடுத்த பக்கிரிதக்கா கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மற்றும் ஆதிகேசவன் ஆகியோருக்கு இடையே நிலப் பிரச்னை இருந்து வந்தது. இதுதொடர்பாக  சாமிக்கண்ணு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த திருப்பத்தூர் உரிமையில் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தில் எந்தவித கட்டிடமும் கட்டக்கூடாது என இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக  ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் சாமிக்கண்ணு புகார் கொடுத்தார்.

இந்த விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தலையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சர் மீது   திருப்பத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சாமிக்கண்ணு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார்தாரரான சாமிக்கண்ணு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி சாமிக்கண்ணு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீதிமன்ற உத்தரவை  மதிக்காமல் அமைச்சரே நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: