தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர் பணியிடங்கள் காலி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதி

தேனி, மார்ச் 19: தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மதுரையில் இருந்து வாரம் ஒருமுறை மட்டும் வரும்  மருத்துவர்களால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். தேனி அருகே க.விலக்கில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு தினசரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் 500க்கும் மேற்பட்ட நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூளை நரம்பியல், விபத்துக்களால் தலையில் காயம் போன்ற சிகிச்சைக்காக ஏராளமானோர் வருகின்றனர். ஆனால், நரம்பியல் மருத்துவத்திற்கென உட்கட்டமைப்பு வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. வாரத்திற்கு ஒரு நாள் மதுரையில் இருந்து ஓரிரு மருத்துவர்கள் வந்து பரிசோதனை மட்டும் செய்து செல்வதாகவும், நரம்பியல் பிரச்சனைகளுக்காக வரும் நோயாளிகளை மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் அவலநிலை உள்ளது. ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏவாக ஜெயலலிதா இருந்தது வரை இம்மருத்துவ மனையில் பல்வேறு துறைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு சிசிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் சிகிச்சைக்காக வந்துசெல்லும் நிலையில், மிக முக்கிய சிறப்பு பிரிவான நரம்பியல் மருத்துவர்கள் இல்லாத நிலையை மாற்றிட தேனி மாவட்டத்தை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ, தேனி மாவட்ட அதிமுகவினரோ எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், அதிமுக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியாக உள்ளனர்.

Related Stories: