புளியங்குடி, வீரவநல்லூரில் வாகன சோதனையில் ரூ.1.79லட்சம் பறிமுதல்

சிவகிரி, மார்ச் 19: புளியங்குடி, வீரவநல்லூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 1.79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. புளியங்குடி மின்வாரிய அலுவலகம் அருகில் வாசுதேவநல்லூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்துப்பாண்டியன், சிறப்பு எஸ்ஐ திவான் காசிம், முதல்நிலை காவலர்கள் ரமேஷ்குமார், சுதந்திரராஜன், காவலர் கதிரேசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியில் இருந்த தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் சங்கர்(27) என்பவரிடம் ரூ.94 ஆயிரம் இருந்தது. சங்கர் காய்கறி கடையில் டிரைவராக வேலை பார்ப்பதாகவும், கேரளாவிற்கு காய்கறி கொண்டு சென்று இறக்கிவிட்டு வியாபாரிகளிடம் வசூல் செய்த பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். அதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.94 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் கனகராஜிடம் ஒப்படைத்தனர்.வீரவநல்லூர்:  வீரவநல்லூர் கிளாக்குளம் டாஸ்மாக் கடை அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரி சண்முகசுந்தரம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சேரன்மகாதேவியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் சங்கிலிபூதப்பாண்டி(26) பைக்கில் வந்தார். அவரிடம் ஆவணங்களின்றி இருந்த 85490 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சேரன்மகாதேவி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: