×

சேலம் ஆத்தூர் அருகே தனியார் ஆலையில் வாயுக்கசிவு: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

சேலம்: ஆத்தூர் அருகே உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில் ரசாயன வாயுக்கசிவு ஏற்பட்டதில் 11 பேர் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது சதாசிவபுரம். இந்தப் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய வீட்டின் அருகிலேயே அவருக்கு சொந்தமான ஜவ்வரிசி ஆலை ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.இந்த ஆலையில் மரவள்ளி கிழங்குகளை அரவை செய்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், குடோனில் 18 பேர் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் அறையில் வைக்கப்பட்டிருந்த குளோரின் மூட்டைகள் தீப்பிடித்து எரிந்தன. தீ விபத்து தொடர்ச்சியாக குளோரின் பவுடர் பகுதியில் இருந்து புகை எழுந்தது. இதனால், அதிர்ச்சியான தொழிலாளர்கள், அதனை தணிக்க தண்ணீரை ஊற்றியுள்ளனர்.

அப்போது, குளோரின் பவுடர், புகையுடன் சேர்ந்து வாயுக்கசிவாக மாறியது. வாயுக்கசிவு பாதிப்பால், 11 பேருக்கு மூச்சுத்திணறல், சுவாச பாதிப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டன. இச்சம்பவத்தில் தனுஷ், சீனிவாசன், மாரிமுத்து, விஜயகுமார், பிரபாகரன், மணிகண்டன், தர்மதுரை, வேல்முருகன், தர்மர், விஜய், ராகேஷ் ஆகிய 11 பேர் ரசாயன வாயு புகையின் தாக்கத்தால் அங்கேயே மயங்கி விழுந்தனர். சக தொழிலாளர்கள் அவர்களை உடனடியாக மீட்டு ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குடோனில் பற்றி எரிந்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 பேரையும் உதவி ஆட்சியர் தமிழ்மணி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சம்பவ இடத்திற்கு காட்டுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் ஜெய சித்ரா, சதாசிவபுரம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஜவ்வரிசி ஆலையில் திடீரென ஏற்பட்ட இந்த விபத்து ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Salem Atur ,SALEM ,JAVWARISI ,ATHUR ,
× RELATED ஆர்வத்துடன் வாங்க குவியும் மக்கள்...