×

மேற்குவங்க முதல்வரின் உயிருக்கு ஆபத்து; டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரவாத சதி?: காதலியின் பதிவால் சிக்கிய கொடூரன்

கொல்கத்தா: டெல்லியில் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைந்து கலவரம் செய்ய திட்டமிட்ட பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி மற்றும் அவரது காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ஜெய்ஷ்-இ-முகமது’ தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய ஹமீம் மொண்டல் என்பவனை சிறப்பு அதிரடி படை போலீசார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். விசாரணையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்குள் போலீஸ் சீருடையில் நுழைந்து மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில அமைப்புகள் ஹமீமிற்கு உத்தரவிட்டது தெரியவந்தது.

அத்துடன், மேற்கு வங்க முதல்வரின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவர் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் அம்பலமாகியுள்ளது. தீவிரவாத சதியில் ஈடுபட்ட ஹமீம் மொண்டலை 14 நாட்கள் போலீஸ் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இவனுடன் இணைந்து செயல்பட்ட காதலி அர்பிதா சர்க்கார் என்பவரை ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் அம்மாநில அமைச்சர் உமேஷ் ராயின் மகனை காதல் வலையில் வீழ்த்தி கடத்தி, அவரது குடும்பத்தினரிடம் பணம் பறிக்க சதித்திட்டம் தீட்டியதாக சிறப்பு அதிரடி படை ஐ.ஜி கவுரவ் சர்மா தெரிவித்துள்ளார்.

அர்பிதா சர்க்காரின் வாட்ஸ்அப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, பாகிஸ்தானில் உள்ள ‘ஷெஷாத் பார்ட்டி’ கும்பலுடன் தொடர்பில் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அவர்களிடம் இருந்து இங்கிலாந்து மற்றும் மெக்சிகோ நாடுகளின் சர்வதேச ‘சிம் கார்டுகள்’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமான இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அர்பிதா சர்க்காரின் சோஷியல் மீடியா கணக்குகளை போலீசார் கண்காணித்ததன் மூலமே இந்த மிகப்பெரிய தீவிரவாத சதி பின்னல் முறியடிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Jantar Mander ,Kolkata ,Pakistan ,Purba ,Bardhaman ,Jaish-e-Mohammed ,
× RELATED சபரிமலை பயணத்தை பக்தர்கள் தவிர்க்க...