ஐதராபாத்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பதிவுகள் வெளியானதை தடுக்க தவறியதாக கூறி மெட்டா இந்தியா தலைவர் மீது ஐதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. அதை தொடர்ந்து பலர் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களை விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டனர். சிலர் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடியை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் சித்தரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஐதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் ரெட்டி மற்றும் தெலங்கானா பா.ஜ நிர்வாகி சாய்கிரண் கவுட் ஆகியோர் ஐதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மெட்டாவின் இந்திய பிரிவு தலைவர் அருண் ஸ்ரீநிவாஸ் மற்றும் பேஸ்புக் பயனர்கள் சிலருக்கு எதிராக சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
