புதுடெல்லி: சர்வதேச எல்லைகளில் உள்ள வங்கி கிளைகளில் கள்ள நோட்டுகளை கண்டறியும் இயந்திரங்களை நிறுவ வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கள்ள நோட்டுகளை கண்டறிவதில் சில வங்கிகளின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே, கள்ள நோட்டுகளை திறம்பட அடையாளம் காண செயல்முறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும்.
சர்வதேச எல்லைகளை கொண்ட மாவட்டங்களில் உள்ள வங்கி கிளைகளில் ரூபாய் நோட்டுகளின் நம்பகத்தன்மையை சரி பார்க்கும் மற்றும் வகைப்படுத்தும் இயந்திரங்கள் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். கள்ள நோட்டுகளை கண்டறிவதை எளிதாக்குதற்கு, அனைத்து வங்கி கிளைகளிலும் அல்லது அடையாளம் காணப்பட்ட பிரிவுகளிலும் புற ஊதா விளக்குகள் மற்றும் நோட்டுகளை வகைப்படுத்தும் அல்லது நம்பகத்தன்மையை சரி பார்க்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வங்கியில் பணத்தை கையாளும் அனைத்து ஊழியர்களுக்கும் அக்டோபர் 31, 2026க்குள் கட்டாயம் பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ” என அறிவுறுத்தி உள்ளது.
