×

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை: முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் யை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார்களுக்கு உரிமம் வழங்குதல், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேற்கண்ட வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்றுமுன்தினம் உத்தரவிட்டிருந்தது.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,”டாஸ்மாக் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரையில் முதற்கட்டமான விசாரணைகள் அனைத்தும் முன்னதாக முடிவடைந்து விட்டது.

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடிந்து போன்ற ஒன்றை தற்போது கையில் எடுத்துள்ளனர். அதாவது அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையாக கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. செந்தில் பாலாஜி எங்கும் தப்பித்து ஓடிவிடமாட்டார். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார்,” முந்தைய ஆட்சி காலத்தில் நடந்த தவறுகள் குறித்து நடவடிக்கை எடுக்ககூடாது என்று சட்டத்தில் எந்த தடைகளும் கிடையாது. செந்தில் பாலாஜியை பொருத்தமட்டில் அவர் வகித்து வந்த அனைத்து துறைகளிலும் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சியங்களை கெடுப்பது மட்டுமில்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டார்.

எனவே செந்தில் பாலாஜிக்கு இந்த விவகாரத்தில் எந்தவித நிவாரணமும் கொடுக்க கூடாது என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,” இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்குகிறது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் முன்ஜாமீனை நாங்கள் ரத்து செய்து விடுவோம். சாட்சிகளை கலைக்கும் விதமாக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கைது நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Senthil Balaji ,Supreme Court ,Tamil Nadu government ,New Delhi ,minister ,
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்